Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் தள்ளிப் போகலாம்!

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் தள்ளிப் போகலாம்!

1000
0
SHARE
Ad

Anwar ibrahimகோலாலம்பூர், மார்ச் 2 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்திப்போகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே இடைத்தேர்தலை தவிர்க்க பக்காத்தான் முயற்சிப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியைப் பொறுத்தவரை அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் பக்காத்தான் சுலபமாக வெற்றி பெறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் ஆருடம்.

#TamilSchoolmychoice

இத்தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பக்காத்தான் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.இருப்பினும் தற்போது இடைத்தேர்தல் நடந்தால் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயம் பக்காத்தானுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவ்வாறு முன்பை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்பதில் அக்கூட்டணிக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சீனர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலேயே பக்காத்தானின் பலம் அடங்கி உள்ளது. ஆனால் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் 70 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் ஆவர். எல்லா மலாய்க்காரர்களும் அம்னோவுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்றாலும், லிம் குவான் எங்கிற்கு எதிரான மலாய்க்காரர்களின் வாக்கு குறித்த கவலை பக்காத்தானுக்கு உள்ளது.

Wan-Azizah-Not contesting2013 முதல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பக்காத்தானுக்கான ஆதரவு சரிந்து வந்துள்ளது தெரிகிறது. ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளை குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே  பக்காத்தானால் தக்க வைக்க முடிந்தது.

இதன் உச்சமாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை இடைத் தேர்தலில் கெராக்கானிடம் ஐசெக இழந்துள்ளது.

அதே சமயத்தில், தேசிய முன்னணி ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் நடந்தால், மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அன்வாருக்கும் பினாங்கு முதல்வருக்கும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

யார் வேட்பாளர்?

இதற்கிடையே பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் யாரைக் களம் இறக்குவது என்பதிலும் பிகேஆர் இருவித மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

டாக்டர் வான் அசிசாவைக் களம் இறக்குவதா, அல்லது அரசியல் அரங்கில் திடீரென நுழைந்துள்ள அவரது 2ஆவது மகள் நூருல் நுஹாவை போட்டியிட வைப்பதா? என்பது தொடர்பில் பிகேஆர் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை.

Nurul Nuhaதற்போதைய நிலவரப்படி நூருல் நுஹாவால் இடைத்தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்று கூறப்படுகிறது. அதே சமயம் வான் அசிசா களம் இறக்கப்பட்டால் அவர் மீதான மதிப்பும் அனுதாப வாக்குகளும் சேர்ந்து அவருக்கு பெரிய வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அவர் கணிப்புகளுக்கு ஏற்ப வெற்றி பெறுவாரேயானால், அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏற்கனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்திருக்கின்றார் என்பதும் அவருக்கு சாதகமான மற்றொரு அம்சமாகும்.

ஆனால், அப்படியே நூருல் நுஹா பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றாலும் அனுபவமின்மை காரணமாக, அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது.

அவரது தமக்கை நூருல் இசா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படலாம் என்றாலும் அதற்கு பாஸ் கட்சி சம்மதம் தெரிவிக்குமா அல்லது தங்களின் தலைவர் ஹாடி அவாங்கை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென வற்புறுத்துமா என்பது மற்றொரு சிக்கல்!

இதற்கிடையே அரச மன்னிப்பு கோரிய மனு மீதான முடிவு தெரியும் வரையில் அன்வார் எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க முடியும். எனவே அந்த முடிவு தெரியும் வரை இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது.