பாங்காக், ஏப்ரல் 2 – தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமரும், இராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் சினவத்ராவுக்கு எதிராக கடந்த வருடம் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 30 பேர் பலியாகினர். இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதால், இராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
சான் ஒச்சா தன்னை அந்நாட்டின் பிரதமராக அறிவித்துக் கொண்டார். அதன்பின்னர் அங்கு கடுமையான இராணுவச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், தாய்லாந்து மன்னர் புமிபோல் அதுல்யடேஜின் ஒப்புதலுடன் இராணுவச் சட்டத்தை விலக்கி கொள்ள ஒச்சா அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு இன்று முதல் இராணுவச் சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் இராணுவத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கி புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் படி 44-வது அரசியல் சட்டத்தின் கீழ், ஒச்சா நாட்டை ஆள்வதற்கும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தில் சர்வாதிகார ஆட்சியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையே ஒச்சா இறங்கி உள்ளார் என பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.