கும்மிடிப்பூண்டி, ஏப்ரல் 8 – ஆந்திராவில் தமிழர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை அடுத்து, சென்னை வந்த 10-க்கும் மேற்பட்ட ஆந்திர மாநில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து இரவில் ஆந்திரா செல்லும், 80 பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இப்பிரச்சனையால், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களில் ஆந்திர மாநில பேருந்துகள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டன. நேற்று மாலை, 5:00 மணியளவில், சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த, எட்டு ஆந்திர மாநில பேருந்துகளை, தமிழர்கள் பலர் அடித்து நொறுக்கினர்.
இதில் பேருந்து கண்ணாடிகள் சேதமடைந்தன. உடனடியாக, ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில், இரவில் இயக்க வேண்டிய, 80 பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழர் முன்னேற்ற கழகத்தின் பொது செயலர் அதியமான், தென் சென்னை மாவட்ட செயலர் பாலன் ஆகியோரிடம், கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, பூந்தமல்லி வழியாக திருப்பதி மற்றும் சித்தூர் செல்லும் ஆந்திர மாநில பேருந்துகளின் கண்ணாடிகளை, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்,
ஆந்திர மாநில பேருந்துகள் தாக்கப்படுவதை அடுத்து, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில், ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்களும் சூழலுக்கு ஏற்ப இயக்கப்பட்டன. இது குறித்து, ஆந்திர மாநில போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:
“சென்னையில் இருந்து, 202 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படும் நிலையில், இரவு நேரத்தில் இயக்கப்படும், 80 பேருந்துகளை நிறுத்தியுள்ளோம். நாளை (இன்று) உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு பின்னரே பேருந்துகளை இயக்குவோம் என அவர் கூறினார்.