சபா, மார்ச் 4 – சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான விசாரணையை நாளை தொடங்கவிருந்த ஆர்.சி .ஐ அதிகாரிகள் லஹாட் டத்துவில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக வரும் மார்ச் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதுபற்றிய தகவலை இவ்விசாரணையை நடத்தும் அதிகாரியான டிபிபி மனோஜ் குருப் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் அவர், ” ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டபடி வரும் மார்ச் 18 மற்றும் 21 ம் தேதிகளில் இவ்விசாரணை மீண்டும் தொடங்கப்படும்” என்றும் தெரிவித்தார். இவ்விசாரணை தொடர்பாக நாளை சாட்சியம் அளிக்கவிருந்த சபாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சோங் யங் லியோங்கிடமிருந்தும் இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது.
முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் ஷிம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய விசாராணைக் குழுவிடம் எட்டு வகையான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவைகளில் நீல நிற அடையாள அட்டை வைத்திருக்கும் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, சட்டத்திற்கு உட்பட்டு தான் அவை அவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?, அப்படி நீல நிற அட்டையை பெற்ற அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா? போன்ற விசாரணைகள் அடங்கியுள்ளது. மேலும் இக்குழு திடீரென அதிகரிக்கும் சபாவின் மக்கள் தொகை பற்றியும் விசாரணை நடத்தவுள்ளது.