ஆந்திரா, ஏப்ரல் 13 – செம்மரம் கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள், 61 தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேரை 7-ஆம் தேதி ஆந்திர காவல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகி உள்ளதால் அவர்களின் நிலை குறித்து உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மரிப்பாடு மற்றும் வேலிகுண்டா வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 61 தமிழக தொழிலாளர்களை கைது செய்து இருப்பதாக நெல்லூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பதி துப்பாக்கிச் சூட்டின் போது, தப்பி ஓடிய அவர்கள் நெல்லூர் மாவட்ட வனப்பகுதிகளில் மறைந்து இருந்த போது சிக்கியிருப்பதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கஜவரா பூகல் கூறினார்.
61 பேர் பிடிபட்டதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனிடையே தமிழக தொழிலாளர்கள் போலி துப்பாக்கிச் சூடு மூலமாக கொலை செய்யப்பட்டுள்ளதற்கான காணொளி ஆதாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.