புதுடெல்லி, ஏப்ரல் 17 – தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் நீட்டிப்பு கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு மனு மீதான விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் கோரி 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அடங்கிய குழு 4 பேருக்கும் டிசம்பர் 18-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டு வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யவில்லை என்றால் ஜாமீனை ரத்து செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஜாமீன் காலம் டிசம்பர் 18-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இந்த ஜாமீன் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தங்களின் ஜாமீனை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் நீட்டிப்பு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான குழு 65-வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு வரும் 21-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக உச்சநீதிமன்ற பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் வரும் 30-மாம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலையில் இந்த ஜாமீன் நீட்டிப்பு மனு மீதான விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.