சென்னை, ஏப்ரல் 21 – நீண்ட வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினத்திற்கு வெற்றியைக் கொடுத்த படம் ‘ஓ காதல் கண்மணி’. இணையவாசிகள் படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்கின்றனர் என தனது கணவருக்காக பரிந்து பேசிய சுஹாசினி கூட, இந்த படத்திற்கு இவ்வளவு நேர்மறையான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்.
படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்’ என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் ‘ஓ காதல் கண்மணி’ என்ற விமர்சனமும், இணையவாசிகள் மத்தியில் உலா வரத் தொடங்கி உள்ளது. இணையவாசிகள் குறிப்பிடும் அந்த படத்தில், கதாநாயனும், கதாநாயகியும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில்லாமல் சேர்ந்து வாழ்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்குகின்றனர்.
அதேபோன்று, ஓ காதல் கண்மணியில் பிராகாஷ்ராஜின் மனைவி கதாபாத்திரம் போன்று பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸில் கதாநாயகியின் தந்தை கதாபத்திரம் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டது போன்று உள்ளது. இரு படங்களிலும், குறிப்பிட்ட அந்த கதாபாத்திரம் தான் கதாநாயகன், கதாநாயகிக்கு இடையே காதல் மலரக் காரணமாக இருக்கும்.
இந்த இரு படங்களிலும் நிறைய ஒற்றுமை இருப்பது தவிர்க்க முடியாத உண்மை. இதனை சுட்டிக்காட்டும் இணையவாசிகளுக்கு சுஹாசினி மணிரத்தினம் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை.