Home கலை உலகம் மலேசியாவில் காஞ்சனா 2 வெற்றி – ஓகே கண்மணி தோல்வி ஏன்? ரசிகையின் விமர்சனம்!

மலேசியாவில் காஞ்சனா 2 வெற்றி – ஓகே கண்மணி தோல்வி ஏன்? ரசிகையின் விமர்சனம்!

763
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 28 – கடந்த வாரம் வெளியான காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன என்றாலும் மலேசியாவைப் பொறுத்தவரை காஞ்சனா-2 மவுசு குறையாமல் அலைமோதும் கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்க, காதல் கண்மணிக்கோ வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே கூட்டம் குறையத் தொடங்கியிருந்தது நன்கு தெரிந்தது.

Kanchana-2-Movie-Posters-1படம் வெளியாகி மூன்றே நாட்களுக்குப் பின்னர், ஒரு வார நாளில், மாலை 6 மணிக்கான காட்சியில் காதல் கண்மணியை நான் கோலாலம்பூரில் இந்தியர்களை வழக்கமாக அதிகம் ஈர்க்கும் திரையரங்கு ஒன்றில் பார்த்தபோது, விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ரசிகர்கள் இருந்தார்கள்.

அதைவிட அதிகமாக, அடுத்த திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த காஞ்சனாவிற்கு கூட்டம் சேர்ந்திருந்தது.

#TamilSchoolmychoice

காஞ்சனாவின் வெற்றிக்குக் காரணங்கள் கூற வேண்டியதில்லை. ஏற்கனவே வெளிவந்த மாபெரும் வெற்றிப் படத்தின் தலைப்பு வரிசை, பிரபலமான நடிகர்கள், நகைச்சுவை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, எல்லாவற்றையும் விட எல்லா தரப்பு மக்களையும் ஈர்க்கும் பேய் பற்றிய கதை, இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், காதல் கண்மணி அந்த அளவுக்கு ஈர்க்காதது ஏன்? என்ற கேள்வி எழ, எனது மனதில் உதித்த காரணங்களோடு, சில சக ரசிகர்கள் பகிர்ந்து கொண்டதையும் சேர்த்து, செல்லியல் வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்க விரும்புகின்றேன்.

என்ன சொல்ல வருகின்றார் மணிரத்னம்?

Maniratnamஇத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்தினம் என்ன கருத்தை முன்வைக்கிறார்? இன்றைய நவநாகரீக உலகில் ஒருசிலர் இப்படி வாழ்கிறார்கள் என்பது உண்மையே.

ஆனால், இதனை ஒட்டுமொத்த சமுதாய பிரதிபலிப்பாக காட்டியிருக்கவேண்டியதில்லையே. மேலும் இப்படி வாழ்கிறார்கள் என்பதை இன்னமும் நாசூக்காக சொல்லியிருக்கலாமே. எந்நேரமும் அவர்கள் கட்டிலில் உரசிக்கொண்டிருப்பதையே காட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லையே.

அந்த வாழ்க்கை முறையில் நிகழக் கூடிய அழுத்தமான சம்பவங்கள், உணர்ச்சித் தருணங்கள் சிலவற்றையும் காட்டியிருக்கலாமே!

இன்னொரு வயதான தம்பதியரான பிரகாஷ்ராஜ் தம்பதியரைப் பார்த்து மனம் மாற ஏதுமில்லை. எல்லா வயதான தம்பதியரும் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மற்றவர் கவனித்துக்கொள்வது என்பது எல்லா நடுத்தர, சாதாரண குடும்பங்களில்  நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மேல்தட்டு மக்களிடத்திலும் அவர்களுக்கு இருக்கும் செல்வச் செழிப்பைக் கொண்டு நவீன மருத்துவ வசதிகளோடு ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்கின்றார்கள். எனவே, வயதான பின் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளும் அம்சத்திலும் அதிலும் புதுமை ஏதுமில்லை.

சேர்ந்து வாழ்வது என்பது இருவர் திருமண நிர்ப்பந்தத்தில் சிக்காமல் சில ஆண்டுகளாவது சேர்ந்து வாழ்வது.

okkanmani6feb2இங்கோ எடுத்த எடுப்பிலேயே வெளிநாட்டு வாய்ப்பு வரும் வரை சேர்ந்து வாழ்வது என்று முடிவுசெய்து வாழ்வது எந்த ரகம்? இதில் காதல் தெரியவில்லை. காதலைக்காட்ட ஒரு பார்வையோ, கன்னத்தில் ஒரு முத்தமோ போதுமே!

இதில் முழுவதும் தெரிந்தது காமமே.

இன்றைய இள வயதினர் மறைந்து செய்வதை மறைக்காமல் செய்ய தைரியமூட்டுகிறாரா மணி சார்?

இது என்ன நடக்காத ஒன்றா என்று கேட்காதீர்கள். சில விஷயங்கள் இலை மறை காயாக இருக்கவேண்டியது  மிகவும் அவசியம். அப்போது தான்  வாழ்வில் சுவாரசியம் இருக்கும். இங்கோ சலிக்க சலிக்க வாழ்ந்துவிட்டு திருமணம் பற்றி யோசிக்கிறார்களாம்!

Ok-Kanmani-jillmoreசேர்ந்து வாழும் கலாச்சாரத்தை தயவு செய்து இளம் வயதினர் மனதில் பதிய விடாதீர்கள். இது திருமணத்தில் இணையும் ஆண், பெண் இருவர் மனதிலும் ஏன் குடும்பத்தினரிடையே கூட இப்படி இருந்திருப்பார்களோ எனும் கேள்வியை எழுப்பக்கூடும். ஏதோ காரணத்திற்காக சிலர் திருமணம் ஆகாமல் பல ஆண்டுகள் கூட சேர்ந்து வாழ்கிறார்கள். விதிவிலக்குகள் எல்லாம் விதிகள் ஆகாது.

மற்றபடி இரண்டு பாடல்கள் படத்தில் கேட்கும்படி இருந்தது. பிரகாஷ்ராஜ் பெண் பார்த்த கதை ரசிக்கும்படி இருந்தது. கதாநாயகனும் நாயகியும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு வாகனத்தில் செல்கிறார்களே – அதுவும் சில சமயங்களில் ரயிலில், சில சமயங்களில் பேருந்தில் – சில சமயங்களில் மோட்டார் சைக்கிள்- அப்புறம் காரில் – அது எப்படி? இத்தனைக்கும் கதை முழுக்க நடப்பது மும்பாய் நகருக்குள்ளேயேதான்.

மலேசியாவில் திரையிடப்பட்ட முதல் நாளே ‘காஞ்சனா’ திரைப்படத்தைப் பார்த்து அதுவும் அரைத்த மாவுதான் என்று விமர்சித்த நாங்கள், நான்கு நாட்கள் கழித்து, Ok கண்மணி பார்த்தபோது  எங்களோடு படம் பார்த்தவர்கள் ஆறு பேர் தான். காஞ்சனாவோ இன்னமும் அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

மலேசியாவில் இந்த கதை எடுபடவில்லை என்பதே உண்மை. என்னிடம் சிலர் இதே கருத்தைப் பதிவுசெய்தனர். படத்தில் புதுமையுமில்லை. புரட்சியுமில்லை. மாறாக ஒரு கலாச்சார சீரழிவுக்கு அங்கீகாரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

படத்தின் கதையம்சத்தினால் குடும்பத்தோடு சென்று பார்க்கவும் யாரும் முன்வரவில்லை. அதுவும் கூட்டம் சேராததற்கான காரணமாக இருக்கலாம்.

தொட்டுப் பார்த்துக் கொள்ளாமலேயே உணர்ச்சிகரமான கணவன் மனைவி காதலை – அந்நியோன்யத்தை – மௌனராகமாக இசைத்துக் காட்டிய –

மணி சார் நீங்களா …. இப்படி?

-சா.விக்னேஸ்வரி