Home உலகம் சிங்கப்பூரில் குழந்தையைக் காப்பாற்றிய வெளிநாட்டவருக்கு விருது!

சிங்கப்பூரில் குழந்தையைக் காப்பாற்றிய வெளிநாட்டவருக்கு விருது!

1417
0
SHARE
Ad

சிங்கப்பூர், ஏப்ரல் 24 –  சிங்கப்பூரில் 3 வயது  குழந்தையை பேராபத்தில் இருந்து மீட்டு சிங்கப்பூரர்கள் மத்தியில் ‘ஹீரோ’ ஆகி இருக்கிறார் ‘சண்முகம்’.

வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளரான சண்முகம் (இந்தியப் பிரஜையாக இருக்கலாம்) ஜூராங் ஈஸ்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே பணியில் இருந்தார்.

அந்த நேரத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் எதிர்பாராத விதமாக அந்த வீட்டைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று துணிகள் காய வைக்கும் வெளிப்புற ஜன்னல் வழியாக வெளியே தொங்கிய நிலையில் கதறிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

Singapore

தலை ஜன்னல் கம்பிகளில் சிக்கிக் கொண்டிருக்க ஆபத்தில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை, உடனடியாக இரண்டாவது மாடிக்கு தாவி ஏறி மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சண்முகத்திற்குப் பின்னால் அவரது நண்பரும் மாடியில் ஏறி உதவி செய்துள்ளார்.

பின்னர், அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலமாக சண்முகத்தையும், குழந்தையையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர்.

இந்நிலையில், சண்முகம் மற்றும் அவரது நண்பரின் சுய விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவர்கள் இருவருக்கும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் விருதுகள் வழங்கப்படும் என்ற தகவலை ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையைப் படம் பிடித்த சிலர், அந்த காணொளியை பேஸ்புக்கில் வெளியிட “வெளிநாட்டினர்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. இவரை போன்றவர்களை பார்க்கும் போது அவர்களின் மீது அன்பு கூடுகின்றது. வாழ்த்துகள்”, “அவர் ஒரு ஹீரோ”, என பல சிங்கப்பூரர்கள் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு, அந்நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் மீது சிங்கப்பூரர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் சிங்கப்பூரில் வசித்து வரும் வெளிநாட்டவர்களை வசை பாடி வந்தனர்.

ஆனால், அந்த சமயத்தில் அப்பிரச்சனையை சிங்கப்பூர் அரசாங்கம் மிகக் கவனமாக கையாண்டது என்றே கூற வேண்டும்.

சிங்கப்பூர் பிரதமரே, இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு வெளிநாட்டவர்களின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விளக்கி அவர்கள் மீதிருந்த களங்கத்தைப் போக்கினார்.

அதே வேளையில், தவறு செய்த வெளிநாட்டவர்களை மட்டும் நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தது சிங்கப்பூர் அரசு.

இந்நிலையில், சண்முகம் போன்று சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் வெளிநாட்டவர்கள் செய்யும் இது போன்ற நல்ல காரியங்கள், அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் பிறந்த மண்ணிற்கும் நல்ல பெயரைப் பெற்று தருவது குறிப்பிடத்தக்கது.

சண்முகம் மற்றும் அவரது நண்பருக்கு வாழ்த்துகள் …

– ஃபீனிக்ஸ்தாசன்

பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த காணொளி:-