விசாகப்பட்டனம், ஏப்ரல் 24 – மக்கள் பிரச்சனைகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். விசாகப்பட்டனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது;
“மாநிலத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்திரபாபு நாயுடு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”.
“இதுதவிர, ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 அங்கன்வாடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதான் பெண்கள் மீது முதல்வர் காட்டும் மரியாதையா? சிங்கப்பூர், மலேசியா, சீனா என அடிக்கடி முதல்வர் தனது அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்”.
“எதற்காக செல்கிறோம் என்று தெரியாமலேயே வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது”.
“வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதை முதல்வர் நிறுத்தி கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று ரோஜா தெரிவித்துள்ளார்.