Home கலை உலகம் “உத்தமவில்லன் படத்துக்காக பெறப்பட்ட கடன் திருப்பித்தரப்படும்” – தயாரிப்பு நிறுவனம்!

“உத்தமவில்லன் படத்துக்காக பெறப்பட்ட கடன் திருப்பித்தரப்படும்” – தயாரிப்பு நிறுவனம்!

547
0
SHARE
Ad

uthamavillanசென்னை, ஏப்ரல் 25 – உத்தமவில்லன் படத்துக்காக பெறப்பட்ட கடன் தொகை வட்டியுடன் திருப்பிக்கொடுக்கப்படும் என்று அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- “நான் தங்கம் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளேன். ‘திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக என்.லிங்குசாமியும், இயக்குனராக என்.சுபாஷ் சந்திரபோசும் உள்ளனர்”.

“இவர்கள், நடிகர் கமல்ஹாசன், நடிகை பூஜாகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.  இந்த படத்தை தயாரிக்க என்னிடம் இருந்து ரூ.2 கோடியை கடனாக லிங்குசாமியும், சுபாஷ் சந்திரபோசும் வாங்கினார்கள்”.

#TamilSchoolmychoice

“அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், என்னிடம் வாங்கிய கடன் தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீத வட்டியும், படம் வெளியிடுவதற்கு முன்பு வட்டியுடன் முழு கடன் தொகையும் திருப்பித்தர வேண்டும் என்றும், படத்தின் மீதான காப்புரிமையையும், படத்தை செங்கல்பட்டு பகுதியின் விநியோக உரிமையும் எனக்கு தரவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது”.

“ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, இந்த படத்தை வெளியிடும் உரிமையை வேறு ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்க ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், எனக்கு தரவேண்டிய ரூ.2 கோடி மற்றும் அதன் வட்டித் தொகையை தராமல், ‘உத்தமவில்லன்’ படத்தை வருகிற மே 1-ஆம் தேதி வெளியிட உள்ளனர்”.

“எனவே, எனக்கு தரவேண்டிய ரூ.2 கோடியையும், வட்டித்தொகை ரூ.22 லட்சமும் சேர்ந்து ரூ.2.22 கோடியை வழங்கும்படி ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்குசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.ஜோசப், ‘மனுதாரருக்கு தரவேண்டிய தொகையை படம் வெளியிடுவதற்கு முன்பு வழங்கப்படும் என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் மனுதாரருக்கு தரவேண்டிய கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் கொடுத்து விட்டு, அது தொடர்பாக அறிக்கையை இந்த உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.