கேதார்நாத், ஏப்ரல் 25 – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 16 கி.மீ. தூரம் மலையில் நடந்து சென்று கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, நேற்று முன்தினம் அவர் உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் உள்ள பிரபல ஆன்மிகத் தலமான கேதார்நாத்துக்கு ஆன்மிக பயணமாக புறப்பட்டார்.
கேதார்நாத்தில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் 11-வது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்காக தலைநகர் டேராடூன் ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் இருந்து ராகுல்காந்தி நேற்று முன்தினம் மாலை ஹெலிகாப்டர் மூலம் கவுரிகுந்த் என்ற இடத்துக்கு சென்றார்.
பின்னர், அங்கிருந்து மலைப்பகுதி வழியாக தனது பயணத்தை அவர் தொடர்ந்தார். ராகுல்காந்தியும், அவருடன் சென்ற காங்கிரஸ் தலைவர்களும், லிங்கோலி என்ற இடம் வரையுள்ள 10 கி.மீ. தூர கரடு முரடான மலைப்பகுதியில் நடந்தே சென்றனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு லிங்கோலியில் ராகுல்காந்தியும் மற்ற தலைவர்களும் தங்கி ஓய்வெடுத்தனர்.
நேற்று காலை அவர்களுடைய பயணம் மீண்டும் தொடர்ந்தது. லிங்கோலியில் இருந்து கேதார்நாத் வரையுள்ள மேலும் 6 கி.மீ. தூரத்தை அவர்கள் நடந்தே சென்று கோவிலை அடைந்தனர். இதனிடையே நேற்று அதிகாலை 4.50 மணிக்கு பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டது.
கோவிலின் தலைமை பூசாரி ரவால் சம்பிரதாய முறைப்படி வேத மந்திரங்களை முழங்கி, ருத்ரபிராயக் மாவட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் கோவில் கருவறையை திறந்தார். கோவிலின் கிழக்குப்பகுதி நடை முதலில் திறக்கப்பட்டதும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மாநில கவர்னர் கே.கே.பால், முதல்வர் ஹரீஷ் ரவாத், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பிரபல சுபி பாடகர் கைலேஷ் கெர், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முதலில் சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
“கேதார்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அவமரியாதை செய்வதுபோல் ஆகும். எனவே பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு நடந்த செல்லும் அதே பாதையில்தான் நானும் இன்று வந்தேன்”.
இந்த மலைப்பாதையில் நாம் நடந்து வந்தால், இங்கே வந்திருக்கும் நமது சகோதரர்களுக்கும் இது நன்மை பயப்பதாக அமையும் என்பதால் நடந்தேன். மேலும் இனி இங்கே மக்கள் தாராளமாக வருவார்கள். அவர்களுடைய பயமும் கொஞ்சம் குறைய வாய்ப்பு ஏற்படும்” என அவர் கூறினார்.