சென்னை, மே 1 – ‘உத்தம வில்லன்’ படத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டதால், படம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 400 திரைஅரங்குகளில் இன்று வெளியாகவிருந்த கமலஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படம், தயாரிப்பாளர் – விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக கமல் ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கம், படத்திற்கு நிதியுதவி அளித்த நிறுவனங்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், விநியோகஸ்தர்கள் படத்தை இன்று மாலை 6.30 மணிக்கு திரையிட சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், கலைப்புலி தாணு உத்தம வில்லன் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியான உத்தம வில்லன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.