Home நாடு அரசியல் பார்வை: இரண்டு இடைத்தேர்தல் முடிவுகளும் எதையும் நிரூபிக்கப் போவதில்லை!

அரசியல் பார்வை: இரண்டு இடைத்தேர்தல் முடிவுகளும் எதையும் நிரூபிக்கப் போவதில்லை!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 5 – பொதுவாக நம் நாட்டில் நடைபெறும் இடைத் தேர்தல்கள் போட்டியிடும் கட்சிகளின் அரசியல் செல்வாக்கையும், ஆளும் தேசிய முன்னணியின் மக்கள் ஆதரவு பலத்தையும் நிர்ணயிக்கும் அளவுகோல்களாகக் கருதப்படும்.

ஆனால், இன்று நடைபெறும் ரொம்பின் இடைத் தேர்தலும், நாளை மறுநாள் மே 7ஆம் தேதி நடைபெறப் போகும் பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலும் எந்த வகையான அரசியல் செய்திகளையும் நமக்கு சுட்டிக் காட்டப் போவதில்லை.

காரணம், இரண்டு தேர்தல்களுமே வித்தியாசமான சூழ்நிலையில், அனுதாபத்தை அடிப்படையாக வைத்து நடைபெறும் தேர்தல்கள் என்பதால், இந்த முடிவுகளின் மூலம் யாருடைய செல்வாக்கையும் நாம் கணிக்க முடியாத சூழ்நிலையே ஏற்படும்.

#TamilSchoolmychoice

ரொம்பின் இடைத் தேர்தல் – மஇகாவுக்கு வேலை இல்லை

 

Jamaluddin Jarjisஹெலிகாப்டர் விபத்தில் காலமான டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் மீதுள்ள அனுதாபத்தால், ரொம்பின் இடைத் தேர்தலில் மீண்டும் அம்னோ-தேசிய முன்னணியே இங்கே வெல்லும்.

எவ்வளவு வாக்குகள் வித்தியாசம் என்பதுதான் எதிர்பார்க்கப்படும் கேள்வி!

போதாக் குறைக்கு இது பிரதமர் நஜிப்பின் சொந்த மாநிலம் என்பதால், கடந்த முறையைவிட வாக்குகள் எந்தவிதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் தேசிய முன்னணியும் அம்னோவும் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மஇகாவுக்கு இங்கே வேலை அதிகம் இல்லை. காரணம்,இருப்பதோ வெறும் 600 வாக்குகள்தான். மொத்த வாக்குகளோ 52,744.

எனவே, மஇகாவில் தற்போது நடைபெற்று வரும் தலைமைத்துவப் போராட்டத்தின் பாதிப்புகள் எதுவும் ரொம்பினில் ஊடுருவியதாகத் தெரியவில்லை.

2013இல் நடைபெற்ற 13வது பொதுத் தேர்தலில் 15,114 பெரும்பான்மையில் ஜமாலுடின் ஜார்ஜிஸ் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த முறை அம்னோ வேட்பாளரும் முன்னாள் பகாங் மந்திரி பெசாருமான  62 வயது ஹாசான் அரிஃபினை எதிர்த்து நிற்பவர் 40 வயதான பகாங் மாநில பாஸ் இளைஞர் பகுதித் தலைவர் நஸ்ரி அகமட்.

பாஸ் கட்சி இங்கே மோசமாகத் தோல்வியடையக் கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. காரணம், ஹூடுட் பிரச்சனையால் மலாய்க்காரர் அல்லாதவர்களிடையே பாஸ் கட்சியின் மீதான அதிருப்தி பெருமளவில் பெருகியுள்ளது. இதனால் சீன வாக்காளர்களின் ஆதரவு பாஸ் கட்சிக்குக் கிடைக்கப் போவதில்லை.

ஆனால், சீன வாக்குகளின் எண்ணிக்கையும் 1,352 ஆகத்தான் இருக்கின்றது.

இதனால், ரொம்பின் முழுக்க மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட – மலாய் அரசியலை மையப்படுத்தியிருக்கும் – தொகுதியாகும்.

Rompin by election

இங்கே பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணியின் சிதைவால், பிகேஆர் கட்சியோ, ஜனநாயக செயல்கட்சியோ பாஸ் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கவில்லை. இதுவும் பாஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகும்.

14 பெல்டா நிலத் திட்டங்களை உள்ளடக்கிய கிராமப் புறத் தொகுதியாக ரொம்பின் இருப்பதால், ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி நகர்ப்புறங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் இங்கே ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன சமூகத்தினருக்கு பொருள்சேவை வரி மீது அதிருப்தி இருக்குமென்றாலும், அதைவிட அதிகமாக ஹூடுட் விவகாரத்தில் அவர்களுக்கு பாஸ் கட்சியின் மீது வெறுப்புணர்வு பெருகியிருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில் ரொம்பின் தொகுதியில் தேசிய முன்னணி வெல்லப் போவது உறுதியென்றாலும், அந்த வெற்றியால், தேசிய முன்னணிக்கு ஆதரவு நிலைத்திருக்கின்றது என்றோ –

ஜிஎஸ்டிக்கும், நஜிப்பின் தலைமைத்துவத்திற்கும் மக்களின் ஆதரவு இருக்கின்றது என்றோ நாம் பொருள் கொள்ள முடியாது.

காரணம், நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கின்ற நிலைமையே வேறு!

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல்

இதே போன்ற சூழ்நிலைதான் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலும்!

அன்வார் இப்ராகிமும் அவரது மனைவி வான் அசிசாவும் காலம் காலமாக பாதுகாத்து வந்திருக்கும் தொகுதி. தற்போது அன்வார் சிறையில் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் அனுதாப அலையும் சேர்ந்திருக்கின்றது!

அன்வாரின் குடும்பத்தினரும், அவரது மகள் நூருல் இசா உள்ளிட்ட பிகேஆர் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் அனைவரும் ஒருசேர முகாமிட்டிருக்கும் தொகுதி இது.

பினாங்கு மாநிலம் பக்காத்தான் ராயாட் கைவசம் இருப்பதால், முதலமைச்சர் லிம் குவான் எங்கின் பிரச்சாரமும் கைகொடுக்கின்றது.

Wan-Azizah

தேசிய முன்னணி எவ்வளவுதான் முட்டி மோதினாலும், கடந்த தேர்தல்களைவிட கூடுதலானப் பெரும்பான்மையில் வான் அசிசா வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

அப்படியே வென்றாலும் – வாக்குகள் வித்தியாசம் எப்படியிருந்தாலும் – அதனால் மக்கள் பக்காத்தான் ராயாட்டிற்கு ஆதரவு தந்து விட்டார்கள் என நாம் பொருள் கொள்ள முடியாது.

காரணம், இங்கேயும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஹூடுட் விவகாரத்தால் பாஸ் கட்சியின் மீதான அதிருப்தி அலை மலாய்க்காரர் அல்லாதவர்களிடையே கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தினால்தான் இன்றைக்கு பக்காத்தான் ராயாட் உடைந்தும் – பிரிந்தும் கிடக்கின்றது என்ற ஆதங்கம் எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடத்தில் பரவிக் கிடக்கின்றது.

ஆக, பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வான் அசிசா வென்றாலும் – அது அன்வாரின் அனுதாப அலையால் கிடைத்த வெற்றியாக – ஜசெக, பிகேஆர் இணைந்த கூட்டணியின் வெற்றியாக – கருதப்படுமே தவிர, மற்ற விவகாரங்களினால் கிடைத்த வெற்றியாக நாம் கருத முடியாது.

ஆக, மிகவும் வித்தியாசமான பின்னணிகளில் நடைபெறும் இந்த இரண்டு இடைத் தேர்தல்களும் நாட்டின் இன்றைய உண்மையான அரசியல் நடப்பு சூழ்நிலையைப் பிரதிபலிக்கப் போவதில்லை –

எந்தவித புதிய அரசியல் செய்தியையோ நமக்குத் தெரிவிக்கப் போவதில்லை.

-இரா.முத்தரசன்