மும்பை, மே 8 – குடி போதையில் காரை ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் அவருக்கு, ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டதால், சல்மான் சிறையில் அடைக்கப்படாமல் வீடு திரும்பினார்.
கடந்த 13 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மும்பை கீழ் நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்றது நிரூபணமானதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான் கான் அன்றைய தினமே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில், இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், சல்மான் இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இந்திய நீதித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.