செவில் (ஸ்பெயின்) மே 10 – ஏர்பஸ் A400M ரக இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று நேற்று ஸ்பெயின் நாட்டின் செவில் (Seville) என்ற நகரின் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்த இடத்தில், அதன் பாகங்கள் சிதறிக் கிடக்க, கரும்புகை சூழ்ந்திருக்கும் காட்சி
அந்த விமானம் துருக்கி நாட்டு அரசாங்கத்தால் வாங்கப்பட்ட விமானம் என ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தனது நிறுவனத்தின் குழு ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடந்த விபத்து தொடர்பான ஒருங்கிணைப்பு விவகாரங்களை கவனிக்க செவில் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
A400M ரக இராணுவ விமானம் ஐரோப்பிய நாடுகளின் தேவைகளுக்காக, உருவாக்கப்பட்ட, அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் ஆற்றல் பெற்ற விமானமாகும்.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் மாதிரி ரக விமானம் இது
இந்த விமானம் எதிர் கொள்ளும் முதல் விபத்து இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 7 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதோடு, மேலும் இருவரின் நிலைமை என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த விமானம் பரிசோதனைப் பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் ஸ்பெயினில் உள்ள செவில் நகரில் ஒருங்கிணைத்து கட்டப்பட்டதாகும்.
இந்த விமானம் ஆறு நாடுகளின் கூட்டு முயற்சியில், 20 பில்லியன் ஈரோஸ் (ஐரோப்பிய டாலர்) முதலீட்டில் இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் விமானமாகும்.