கோத்தாகினபாலு, மே 9 – முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் நோ ஓமாரின் சகோதரர் சபா காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். ஒருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் தேடப்பட்டு வருகின்றார்.
மாட் மலாயா என்று அழைக்கப்படும் அந்த 43 வயது ஆடவர், கடந்த புதன்கிழமை பழுதுபார்ப்பவர் (மெக்கானிக்) ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் முடிவில் மூன்று முறை அந்த மெக்கானிக்கின் வலது காலில் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மிக ஆபத்தானவராக காவல்துறை அறிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் கடந்த 2007ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், தற்போது நிகழ்ந்துள்ள சம்பவத்துக்குப் பின்னர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
“மட் மலாயா ஆபத்தானவர். அவர் பொதுமக்களைச் சுடுவதற்கு தயங்கமாட்டார். அவரை நேரில் கண்டாலோ அல்லது அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தாலோ, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக பொதுமக்கள் தனித்து இஷ்டத்திற்கு செயல்படுவது கூடாது,” என சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறினார்.
தனது குளிரூட்டியில் (ஏர்கோன்டிஷன்) ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்வதற்காக அந்த மெக்கானிக்கை மட் மலாயா அணுகியதாகவும், அப்போது அந்த மெக்கானிக்குடன் மட் மலாயா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஜலாலுடின் விவரித்தார்.
இதையடுத்து அந்த மெக்கானிக்கை மட் மலாயா மூன்று முறை சுட்டுவிட்டு தப்பியோட, அந்தக் கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சொந்த வீட்டில் இல்லை
இதற்கிடையில் முகமட் ஜூஸ்னாய்டி ஓமார் என்ற பெயர் கொண்ட மட் மலாயாவைத் தேடிச் சென்றபோது, லிக்காசில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அவர் குடும்பத்தோடு வெளியேறிவிட்டதாக கோத்தா கினபாலு நகரக் காவல் துறையின் துணை ஆணையர் (அசிஸ்டெண்ட் கமிஷனர்) எம்.சந்திரா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சபாவின் முக்கிய நுழைவு மையங்களைக் காவல் துறையினர் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.