Home நாடு “பழனிவேல் உண்மையான அரசியல் எதிரியை சந்திப்பார்” – சாமிவேலு எச்சரிக்கை

“பழனிவேல் உண்மையான அரசியல் எதிரியை சந்திப்பார்” – சாமிவேலு எச்சரிக்கை

608
0
SHARE
Ad

 

Samy Velluகோலாலம்பூர், மே 11 – மஇகா-வை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பேரழிவிற்கு கொண்டு சென்று விடுவார் என முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தெரிவித்துள்ளார்.

நேற்று பழனிவேல் விடுத்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று கருத்துத் தெரிவித்துள்ள சாமிவேலு, “அந்த மனிதருக்கு, நீங்கள் என்னதான் கொடுத்தாலும், அதை அழித்துவிடுவார்” என்று கூறியுள்ளதாக தி மலாய் மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் பழனிவேல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சாமிவேலு, “ஒரு தலைவராக (பழனிவேல்) மக்களுக்கு என்ன செய்துள்ளார்? சொல்லச் சொல்லுங்கள். எனக்கு தெரிய வேண்டும்.”

“அவர் ஒரு வெட்கமற்ற ஜந்து. அவரால் மஇகா-வை நிர்வகிக்க முடியாது. காரணம் அவருக்கு அந்த தகுதி இல்லை. அவருக்கு யோசிக்கும் சக்தி, திட்டமிடுதல், நடவடிக்கை எடுத்தல் என எந்த ஒரு திறமையும் இல்லை.அதனால் தான் மஇகா-வை சாக்கடையில் தள்ளுகிறார்” என சாமிவேலு காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், எம்ஐஇடி (Maju Institute of Educational Development) குறித்தும், எய்ம்ஸ்ட் (Asian Institute of Medicine, Science & Technology) குறித்தும் தனக்கு அறிவுரை கூற பழனிவேலுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்றும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

“எம்ஐஇடி என்பது ஒரு சார்பற்ற நிறுவனம். பழனிவேல் எம்ஐஇடி மற்றும் எய்ம்ஸ்ட் நிர்வாகக் குழுவில் வகித்து வந்த தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர்கள் கூட்டத்திற்கு அழைத்த போது கூட பழனிவேலால் சென்று கலந்து கொள்ள இயலவில்லை. அதனால் அது குறித்து பழனிவேல் எங்கும் வாய் திறக்க உரிமை கிடையாது” என்று அந்த இரு பல்கலைக்கழகங்களின் தலைவருமான சாமிவேலு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இன்று முதல், பழனிவேல் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என நான் முடிவெடுத்துவிட்டேன். அவர் மஇகா-வை கொலை செய்யப் போகிறார். கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக அவர் செய்து வந்ததை மேலும் தொடர்ந்தால், கட்சிக்கு பேரழிவு வெகு தொலைவில் இல்லை”

“பழனிவேல் வாயை மூடிக் கொண்டு தனது வேலையில் கவனம் செலுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் உண்மையான அரசியல் எதிரியை சந்திப்பார். நாடெங்கிலும் சென்று அவரை வெளியேற்றுவதற்கான வேலைகளை செய்வேன். நான் தான் அவரை பதவியில் அமர வைத்தேன். நானே மக்களிடம் சென்று தவறு செய்துவிட்டதாகக் கூறுவேன்” இவ்வாறு சாமிவேலு தெரிவித்துள்ளார்.

நேற்று சாமிவேலுக்கு எதிராக பழனிவேல் வெளியிட்ட அறிக்கையில் “சாமிவேலு பதவியிலிருந்து விலகிவிட்டார். எனவே அவர் இனிமேல் விலகி நிற்க வேண்டும். இந்தியச் சமுதாயம் அவருக்கு ஏறத்தாழ 30 ஆண்டுகால அவகாசம் அளித்துவிட்டது, அதுவே போதுமானது. இச்சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் உயர மேலும் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை என் வழியில் செய்ய அவர் வழிவிடவேண்டும்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.