கோலாலம்பூர், மே 11 – மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு நடப்பு தலைமைத்துவத்தின் இயலாமையும், பலவீனமும்தான் காரணம் என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்
சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பின் தூண்டுதலும் கட்சியின் இத்தகைய நிலைக்கு காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு கட்சி
விவகாரங்களில் தேவையின்றித் தலையிடுவதாகவும், தனது தலைமைத்துவத்திற்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிடுவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் டத்தோ பழனிவேல் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு செய்தியாளர்கள் கேட்டபோது,
பழனிவேலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றார் டாக்டர் சுப்ரா.
“நாங்கள் அனைவரும் சொந்தமாகச் சிந்திக்கவும், சுயமாக முடிவுகளும் எடுக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். எனவே நம்மையெல்லாம் சாமிவேலு தூண்டிவிடுகிறார் என்பதில் உண்மை இல்லை. பிறரது தூண்டுதல்களுக்கு ஆட்படக்கூடிய கடைசி நபர் நானாகவே இருப்பேன்,” என்று டாக்டர் சுப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கட்சியில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு எல்லாம் நடப்பு தலைமைத்துவம் பலவீனமடைந்து இருப்பதும், அதன் இயலாமையுமே முக்கிய காரணம் என்று அவர் மேலும் கூறினார்.