கோலாலம்பூர், மே 13 – மரணமடைந்த தியோ பெங் ஹாக் குடும்பத்தாருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும், அரசாங்கத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தியோ குடும்பத்தார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தங்களது அஜாக்கிரதை தான் தியோவின் மரணத்திற்கு காரணமாக
அமைந்துவிட்டது என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அரசுத் தரப்பு
ஒப்புக் கொண்டது.
இதையடுத்து நீதிபதி ரோஸ்நைனி சாவுப், தியோ குடும்பத்தாருக்கு பிரதிவாதி தரப்பு 6 லட்சம் ரிங்கிட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு செலவாக 60 ஆயிரம் ரிங்கிட் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.இதனால் இந்த வழக்கு விசாரணை கட்டத்திற்கு செல்லும் முன்னே முடித்து வைக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில செயற்குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளராக பணியற்றிய தியோ (வயது 30), கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி ஷா ஆலமில் உள்ள ப்ளாசா மசாலாம் என்ற வணிக வளாகத்தில் 5 ஆவது மாடி தாழ்வாரத்தில் இறந்துகிடந்தார்.
முன்னதாக, அவர் அதே வளாகத்தில் 14 -வது மாடியில் இருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வாக்குமூலம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.