கோலாலம்பூர், மே 24 – கூகுள் நிறுவனம், மைக்ரோசாப்ட் போன்று கணினி மட்டுமல்லாது அனைத்து விதமான கருவிகளுக்கும் சேர்த்து பிரத்தியேக இயங்கு தளம் ஒன்றை உருவாக்கி வருவதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. ‘பிரில்லோ’ (Brillo) என்ற பெயரில் நடைபெற்று வரும் இதற்கான ஆராய்ச்சியை விரைந்து முடிக்க கூகுள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த ப்ரில்லோ இயங்குதளமான 32 எம்பி அல்லது 64 எம்பி ‘முதன்மை நினைவகத்தில்’ (RAM) இயங்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மிகச் சிறிய மின் சாதனப் பொருட்களிலும் இந்த இயங்குதளத்தை மேம்படுத்த முடியும். உலக நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ‘இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ (Internet of Things) ஆராய்ச்சிக்கு இந்த ப்ரில்லோ இயங்குதளம் பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிவிற்கு வந்தால், நமது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டி முதல் மின் விளக்கு வரை அனைத்தும் உயிர்பெற்று விடும். அவை அனைத்தும் தானியங்கி கருவிகளாக மாறிவிடும். ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய மூன்று நிறுவனங்கள் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் திட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும், அண்டிரொய்டு போன்று மின்னணு பொருட்களுக்கான புதிய இயங்குதள முயற்சியில் கூகுள் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் நாட்களில் அண்டிரொய்டு மேம்பாடுகளுக்கான அறிவிப்புகளுடன் புதிய இயங்குதளம் பற்றிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.