தனது அன்றாட செயல்களைக் கூட செல்ஃபியாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வரும் இளம் தலைமுறையிடம் புதுமையான ஒன்று கிடைத்தால், விபரீதம் தான். அத்தைகைய விபரீதத்தை தான் மாஸ்கோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சந்தித்துள்ளார்.
தனது அலுவலக பாதுகாப்பாளர், ஒப்படைத்துச் சென்ற துப்பாக்கியை தனது தலையில் குறி வைத்தவாறே செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டதால், நொடிப்பொழுதில் துப்பாக்கியில் இருந்த தோட்டா இளம்பெண்னின் தலையைத் தாக்கியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரை உடனடியாக மீட்ட அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலையில் தோட்டா பாய்ந்துள்ளதால் மிகுந்த ஆபத்தான நிலையில் அவர் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள மாஸ்கோ காவல்துறையினர், இது எதிர்பாராத விதமாக நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.