மில்பிட்டாஸ், ஜூன் 1 – ‘கிளீன்பேஏரியா’ (CleanBayArea) என்ற மறுசுழற்சி நிறுவனம் கடந்த சில நாட்களாக 100,000 டாலர்கள் மதிப்புள்ள காசோலையை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணை தேடி வருகிறது. அப்படி அந்த பெண் என்ன செய்துவிட்டார் என்று விசாரிக்கையில் தான், பழைய ஆப்பிள் கணினியை எடைக்கு போட்டதால் அப்பெண்ணிற்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அறுபது வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கிளீன்பேஏரியா நிறுவனத்திடம் தனது கணவனின் அறையில் இருந்த பழைய மின்னணு கருவிகளை மறுசுழற்சிக்காக கொடுத்துள்ளார். அவர் கொடுத்த அந்த கருவிகளில் ஒரு பழைய கணினி சார்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன. அதனை கிளீன்பேஏரியா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
அதனை ஆய்வு செய்த ஆப்பிள், அந்த கருவியை 200,000 அமெரிக்க டாலர்களுக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. அது தொடர்பான விசாரிப்புகளில் தான், அந்த பெண்மணி கொடுத்துச் சென்ற பொருள், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்நியாக் வடிவமைத்த முதல் ஆப்பிள் கணினி என்று தெரிய வந்துள்ளது. 1976-ல் கைகளாலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கணினியின் அப்போதைய விலை 666.66 டாலர்களாகும்.
இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட கிளீன்பேஏரியா, பொருட்களை விற்போருக்கு 50 சதவீதத்தை தர வேண்டும் என்ற வழக்கமான ஒப்பந்தப்படி, அப்பெண்ணிற்கு 100,000 டாலர்களைக் கொடுப்பதற்காக அவரைத் தேடி வருகின்றது.