கொழும்பு, ஜூன் 1 – இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெறும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி அவர்கள் வளரும் பட்சத்தில் நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கத் துவங்கி விடும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கில் மத்திய பகுதியான அனுராதபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜபக்சே விடுதலைப்புலிகள் எழுச்சி குறித்து கூறுகையில், “அதிபர் சிறீசேனா, வடக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். வடக்குப்பகுதியில் இராணுவத்தின் பலத்தையும் குறைத்து வருகிறார். வடக்கு பகுதி எப்போதும் பதற்றமான பகுதி, அங்கிருந்து இராணுவத்தை அகற்றுவது தவறானது என்று இலங்கை அரசு முன்பே எச்சரித்துள்ளது. அதையும் மீறி சிறீசேனா செயல்படுகிறார்.”
“இதனால் இங்கு மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெறும் சூழல் உருவாகி உள்ளதாக நான் சந்தேகிக்கிறேன். இலங்கையில் தற்போது தீவிரவாதிகள் இல்லாத சூழல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், விடுதலைப்புலிகள் மீண்டும் உருவானால், நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கி விடும். அதனால் நாட்டு மக்களின் தற்போதய மன நிம்மதியும், ஒற்றுமையும் கெட்டு விடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.