சென்னை,ஜூன் 4- ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவாக ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுவது உறுதியானது.
ஆனால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று திமுக,மதிமுக,பாமக போன்ற முக்கியக் கட்சிகள் அறிவித்துவிட்டன.
இந்நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.போட்டி வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து,தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.தேர்தல் அதிகாரியாக அந்த மண்டலத்தில் அதிகாரியாக இருந்த சவுரிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் நாளான நேற்று சுயேட்சையாகப் போட்டியிடும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பதமராஜன், அகமது ஷஜஹான், ரவி, அபிரகாம் ராஜமோகன் ஆகியோரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் செய்ய வருகிற 10 ஆம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.