Home இந்தியா ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி – அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி – அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

522
0
SHARE
Ad

New-CM_Jaya7(C)சென்னை, மே 30 – ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதை தொடர்ந்து, தமிழக முதல்வராக கடந்த 23-ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டுமென்றால், 6 மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு வசதியாக, சென்னை ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதி அதிமுக வெற்றிவேல் கடந்த 17-ஆம் தேதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட போவதில்லை என்று திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. தேமுதிக, பாஜ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. விரைவில் இவர்கள் முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை கழகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, 27-ஆம் தேதி நடைபெற உள்ள  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, பொது செயலாளரும், முதல்வருமான  ஜெயலலிதா நிறுத்தப்படுகிறார்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.