நியூ யார்க், மே 30 – நியூ யார்க்கில் வானுயர் கட்டிடங்களான இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் இடிக்கப்பட்டு ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில் அந்த இடத்தில் அமெரிக்கா புதிய உலக வர்த்தக மையம் ஒன்றை கட்டி வந்தது. இந்த மையம் நேற்று திறக்கப்பட்டு மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் 100, 101-வது மாடியில் இருந்து நியூ யார்க் நகரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
உலக வர்த்தகம் மையத்தின் திறப்பு பற்றி அதன் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 11, 2001-ம் ஆண்டு பிறகு 14 ஆண்டுகள் கழித்து, இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில் உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் 4 மில்லியன் பார்வையாளர்களாவது இந்த மையத்தின் அமைப்பைக் காண வருவர் என்று எதிர்பார்க்கிறோம்.”
“அப்படி வருபவர்கள் 360 டிகிரி கோணத்தில் நியூ யார்க்கின் அழகை ரசிக்கலாம். இது ஒட்டுமொத்தமாக புதிய அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.