புத்ரா ஜெயா, மே 30 – பெர்லிஸ்சில் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் தடயவியல் பரிசோதனைக்கு உதவத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாங் கெலியான் பகுதியில் இதுவரை 139 சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடியிடம் அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் ஜெ ஜோன்சன் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
மே 26 முதல் ஜூன் 1 வரை அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் சாஹிட் ஹமிடி. அவர் ஐ.நா. பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் ஜெ ஜோன்சனும், ஹமிடியும் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க விசா சலுகைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் மனிதக் கடத்தல், ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் பிரச்சினையை பொடா சட்டத்தின் மூலம் எதிர்கொள்ள மலேசிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்தாலோசனை செய்ததாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.