ஐதராபாத், ஜூன் 11 – எப்படியேனும் பேஸ்புக்கில் சில நூறு ‘லைக்ஸ்களை’ (Likes) வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஐதராபாத் இளைஞர் ஒருவர் உயிரியல் பூங்காவில் கூண்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தையைத் துன்புறுத்திப் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அவரின் இந்தச் செய்கையே அவரைப் பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது. பொது ஊடகத்தில் அவரது புகைப்படத்தைப் பார்த்த காவல் துறையினர் தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத் நகரின் பகதூர்புரா பகுதியில் உள்ள நேரு உயிரியல் பூங்காவைக் காண ஆரீஃப் தாஹா மேதி என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். ஒவ்வொரு உயிரினங்களையும் புகைப்படம் எடுத்து வந்த ஆரீஃபிற்கு இரும்புக் கூண்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுத்தையுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுத்தைக் கூண்டின் அருகே சென்றுள்ளார். இதனைப் பூங்கா ஊழியர் தடுத்துள்ளார்.
ஆனால் அவர், அந்த ஊழியருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு சிறுத்தை இருக்கும் தடுப்புப் பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், கூண்டில் இருக்கும் சிறுத்தையைத் தான் பிடித்திருக்கும் ‘வீர தீர’ச் செயலைப் புகைப்படமாக எடுக்க சிறுத்தையைத் தன் பக்கத்தில் இழுத்துத் துன்புறுத்தி உள்ளார்.
அப்போது எடுத்த புகைப்படம் மற்றும் காணொளிப் பதிவுகளை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். பொது ஊடகத்தில் வெளியான இந்தப் புகைப்படத்தை நேரு உயிரியல் பூங்கா ஊழியர் மொய்னுதீன் பார்த்துவிட்டு, இதுகுறித்துக் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர், ஆரிஃபை உயிரியல் பூங்காவில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது, விலங்கைத் துன்புறுத்தியது மற்றும் ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
மேலும், ஆரிஃபிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரின் இந்தச் செயல்களுக்கு அனுமதி அளித்த உதவி வனவிலங்குப் பராமரிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதே உயிரியல் பூங்காவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் லைக்ஸ்களுக்காக ஆமையின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.