பனாஜி, ஜூன் 11 – இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவாவில் செயல்பட்டு வந்த மேகி உற்பத்தி ஆலை மூடப்பட்டது. இதன் காரணமாக சுமார் 500 ஊழியர்களின் வேலை பறிபோய் உள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்ப உணவாக இருந்து வந்தது. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகி உணவுப் பொருட்களில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அலுமினியம் வேதிப்பொருள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்கள், பரிசோதனைக்குப் பிறகு மேகியைத் தடை செய்தன. மேகி நிறுவனமும் இது தொடர்பாக தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை தனது விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து கோவாவின் பிச்சோலிம் பகுதியில் செயல்பட்டு வந்த மேகி ஆலை மூடப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வந்த 500 ஊழியர்கள் தங்கள் பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.
இதுபற்றி நெஸ்லே நிறுவனம் கூறுகையில், “மேகி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் வரை அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி உள்ளோம். அதன் காரணமாகவே பிச்சோலிம் மேகி ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலை எப்போது மீண்டும் செயல்படத் தொடங்குகிறதோ அப்போது ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியும்” என்று அறிவித்துள்ளது.