வாஷிங்டன், ஜூன் 11 – ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை முறியடிக்க அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஈராக் ராணுவத்திற்கு போதிய பயிற்சி மற்றும் உதவிகள் செய்வதற்கு 3100 அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தங்கி உள்ளனர்.
அமெரிக்கா தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்தபோதிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. ஈராக் தலைநகரம் பாக்தாத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலேயே ஐ.எஸ். தீவிரவாதிகள் புகுந்துவிட்டனர்.
எனவே பாக்தாத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கூடுதல் உதவி செய்யும்படி ஈராக் அமெரிக்காவை கேட்டுக்கொண்டது. ஜெர்மனில் நடந்த பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் ஈராக் பிரதமர் ஹைதர்அலி அபாதியும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சந்தித்து பேசினார்கள். ஹைதர்அலி அபாதி, ஒபாமாவிடம் மேலும் தேவையான ராணுவ உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மேலும் 400 வீரர்களை அனுப்புவதற்கு ஒபாமா சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமெரிக்க அரசு அறிவிப்பாளர் வெளியிட்டுள்ளார். ஈராக்கில் அமெரிக்கா 4 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது.
புதிய வீரர்கள் அனுப்பப்படுவதை அடுத்து பயிற்சி முகாம் 5-ஆக உயர்த்தப்படுகிறது. இதில் ஈராக் ராணுவத்தில் புதிதாக சேரும் படை வீரர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.