சென்னை, ஜூன் 14 – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட உலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
நேற்று, தந்திச் செய்தித் தொலைக்காட்சியில் தொலைபேசி வழியாகத் தொலைக்காட்சிச் செய்தியாளர், விஷாலுடன் நடத்திய நேர்காணலின்போது விஷால் இந்த திடீர் அறிவிப்பைச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல் கடுமையாகச் சூடுபிடிக்கும் என்றும், அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து நடிகர் சிவகுமார் நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன.
சரத்குமார் அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருப்பதால், அவருக்கு மாற்றாக சிவகுமார் பொருத்தமானவர் என்று போட்டித் தரப்பு கருதுகின்றது. காரணம், முதல்வர் ஜெயலலிதா சிவகுமார் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். சிவகுமார் வீட்டுத் திருமணத்திற்கு அவரது இல்லத்திற்கே சென்று வாழ்த்து தெரிவித்து மரியாதை செலுத்தியவர்.
அண்மையில் நடந்த ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பதவியேற்பு விழாவிலும் சிவகுமார் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இதனால், சரத்குமாரின் ஜெயலலிதா-அதிமுக தரப்பு செல்வாக்கை முறியடிக்க பொருத்தமானவர் என்ற முறையில் சிவகுமாரைக் களமிறக்கப் போட்டித் தரப்பு மும்முரமாகியுள்ளது.
ஆயினும், சிவகுமார் இன்னும் தனது அதிகாரபூர்வ ஒப்புதலைத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடுவதாக விஷால் அறிவித்திருப்பது தமிழ்த் திரையுலகைப் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.