கொல்கத்தா. ஜூன் 17- மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சாரதா நிதி நிறுவன மோசடியாகும். இதில் இந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்த இந்திப்பட நடிகரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினருமான மிதுன் சக்கரவர்த்திக்கும் பங்குண்டு என்னும் பேச்சு எழுந்தது.
இது சம்பந்தமாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மிதுன் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சாரதா நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததற்காகத் தான் ஊதியமாகப் பெற்ற 1 கோடியே 19 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், மோசடியில் தனக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, நேற்று கொல்கத்தாவின் சால்ட்லேக் பகுதியில் உள்ள அம்லாக்கப் பிரிவு அலுவலகத்திற்குத் தனது வழக்கறிஞருடன் வந்து ரூபாய் 1 கோடியே 19 லட்சத்துக்கான காசோலையை அமலாக்கப் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
மேலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் நடித்த காட்சிகள், விளம்பரங்கள் தொடர்பான குறுந்தகடுகளையும் ஒப்படைத்தார்.
மிதுனின் இத்தகைய நடவடிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.