சென்னை, ஜூன்17- ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக 1,100 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுகளைக் கணக்கிடும் 300 எந்திரங்களும் கடந்த 7-ந் தேதி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டன்.
அங்கு அந்த எந்திரங்களை மறு சீரமைக்கும் பணி சில தினங்களாக நடைபெற்று வந்தது. அப்பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 230 வாக்குச்சாவடி மையங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
குழப்பம், குளறுபடிகள் மற்றும் சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக வேட்பாளர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி சவுரிராஜன், பொதுப் பார்வையாளர் ஜோதி கலாஷ், மாவட்டத் தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் ஆகியோர் குலுக்கல் முறையில் 1,400 எந்திரங்களில் இருந்து 690 எந்திரங்களைத் தேர்ந்தெடுத்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பணி ஒரு சில தினங்களில் தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.