சிங்கப்பூர், ஜூன் 22 – சிங்கப்பூரில் மெர்ஸ் நோய் விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கேன் கிம் யாங் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் மெர்ஸ் நோய் பரவி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், அனைத்துலக இணைப்பு காரணமாக சிங்கப்பூரிலும் மெர்ஸ் நோய் கண்டிப்பாகப் பரவ வாய்ப்புள்ளது. ஆனால், அது வெகு விரைவிலா அல்லது தாமதப்படுமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் மெர்ஸ் நோய் குறித்துப் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர், “சிங்கப்பூர், உலக நாடுகளின் இணைப்பாக உள்ளது. அதனால் மெர்ஸ் நோய் குறித்த கருத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது” என்று கூறியிருந்தார்.
இதே கருத்தினைத் தான் சுகாதார அமைச்சர் கேன் கிம் யாங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தற்சமயம் விமான நிலையங்களில் மெர்ஸ் குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம். மெர்ஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு மெர்ஸ் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயணிகளுக்கும் இந்த நடவடிக்கை தொடருமா என்பதைத் தற்போது கூறமுடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.