கோலாலம்பூர், ஜூன் 25- அரச மன்னிப்புக் கோரும் தனது மனுவை மன்னிப்பு வாரியம் நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அன்வார் இப்ராகிம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அசீசா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், அரச மன்னிப்பு தொடர்பான அன்வாரின் கோரிக்கையை மன்னிப்பு வாரியம் நிராகரித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் மன்னிப்பு வாரியம் மீண்டும் கூடி தனது மனுவை உரிய வகையில் பரிசீலித்து மாமன்னருக்குத் தக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார். தனது மனுவில் பிரதிவாதிகளாகக் கூட்டரசு மன்னிப்பு வாரியம், அட்டர்னி ஜெனரல் மற்றும் மத்திய அரசை அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஒரினப் புணர்ச்சி வழக்கில் அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் அரச மன்னிப்புக் கோரி மாமன்னரிடம் மனு அளித்தனர்.
மார்ச் 27-ஆம் தேதி அன்று அன்வார் தரப்பின் மனுவை மன்னிப்பு வாரியம் நிராகரித்துவிட்டதாக அவரது குடும்பத்தாருக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்தது.
இதையடுத்து ஏப்ரல் 27-ஆம் தேதி, மன்னிப்பு வாரியம் எதன் அடிப்படையில் இத்தகைய முடிவுக்கு வந்தது என்பதை விவரிக்கக் கோரி அன்வார் குடும்பத்தார் மனு அளித்தனர். இது தொடர்பாகத் தங்களுக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை என அன்வார் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என மாமன்னருக்கு மன்னிப்பு வாரியம் ஆலோசனை வழங்க உத்தரவிடக் கோரி அன்வார் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.