வதோதரா, ஜூன் 27 – குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள வனப்பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்து ஒரு பெண் சிங்கம் வெளியேறி அருகில் உள்ள இங்க்ரோலா கிராமத்துக்கு வந்து அங்குள்ள சிவன் கோவிலுக்குள் புகுந்தது.
இதை அறியாமல், சாமி கும்பிட கோவிலுக்குள் சென்ற 2 பெண்களை அந்தச் சிங்கம் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த வன இலாகா அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் போராடி, சிங்கத்துக்கு மயக்க ஊசியைச் செலுத்தி அதைப் பிடித்தனர். பின்னர் அதைக் கூண்டில் அடைத்துக் காட்டில் கொண்டு போய் விட்டனர்.