மத்தியத் தொலை தொடர்புத் துறையின் அமைச்சராகத் தயாநிதி மாறன் இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளைத் தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், ஜூன் 29ம் தேதி விசாரணைக்கு வருமாறு தயாநிதிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் அன்று விசாரணைக்கு வராமல் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணையின் போது தாம் கைது செய்யப்படக் கூடும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர், முன்பிணை(முன் ஜாமீன்) கோரியிருந்தார்.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவருக்கு 6 மாத கால இடைக்காலப் பிணை வழங்கியிருந்தது.
இதனால், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி பிணைத் தொகை செலுத்தி முன்பிணை பெற்றார்.
இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இன்று விசாரணைக்காகத் தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.