Home நாடு மலிவு விலைத் தங்கும் விடுதிகளில் கொள்ளையடித்த 7 பேர் கைது

மலிவு விலைத் தங்கும் விடுதிகளில் கொள்ளையடித்த 7 பேர் கைது

448
0
SHARE
Ad

Crime-Pixகோலாலம்பூர், ஜூலை 2 – பத்துக்கும் மேற்பட்ட தங்கு விடுதிகளில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த ஒரு மாதக் கண்காணிப்புக்குப் பின்னர் இக்குறிப்பிட்ட சந்தேக நபர்களை இரு வெவ்வேறு இடங்களில் காவல்துறையினர் மடக்கினர்.

சுங்கைபீசியில் உள்ள ஒரு தங்கு விடுதியில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி துணைத் தலைமைக் கண்காணிப்பாளர் ஹபிபி மஜின்ஜி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மறுநாள் மேலும் 4 பேர் கைதாகினர். இந்நால்வரும் பத்துமலைப் பகுதியில் உள்ள கம்போங் லக்சமானா உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

“கைதானவர்களிடம் இருந்து 2 மைவி ரகக் கார்கள், 9 பாராங் கத்திகள், ஒரு போலீஸ் உடுப்பு, 5 மடிக்கணினிகள், 2 கைபேசி மற்றும் கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்றார் ஹபிபி.

குறைந்த கட்டணத் தங்குவிடுதிகளைக் குறி வைத்து இக்கொள்ளைக் கும்பல் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அறை வாடகை உள்ளிட்ட விவரங்களை விசாரிக்கும் வாடிக்கையாளர்களைப் போல் கொள்ளையர்கள் தங்கு விடுதிக்குள் முதலில் நுழைவர் என்றார்.

“கொள்ளையடிக்கத் தகுந்த தருணமாகக் கருதும் பட்சத்தில் ஒருவர் பாராங் கத்தியை வெளியே எடுப்பார். மற்ற கொள்ளையர்கள் தங்கு விடுதி வரவேற்பறையில் உள்ள பணத்தைப் பறிப்பர். மேலும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள இரகசியக் கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகளையும் தேடிப்பிடித்து உடைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

“கூட்டுக் கொள்ளைத் தொடர்பில் 7 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை அவர்கள் காவல்துறையினரின் காவலில் இருப்பர்” என்றார் ஹபிபி.

இக்கொள்ளைக் கும்பல் கடந்தாண்டு ஜூன் முதல் செயல்பட்டு வருவதாவும், சாலையோர வழிப்பறிகளில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இவர்களில் 5 பேர் ஏற்கெனவே கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.