ஜெய்ப்பூர், ஜூலை 3 – இந்தி நடிகையும், பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். இந்தச் சம்பவத்தில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது கார் மோதிப் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாகப் பலியானது.
நடிகை ஹேமமாலினி, நேற்று இரவு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 60 கிமீ தொலைவில் இருக்கும் தவுசா என்ற இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அவரது காரை ஹேமமாலினியின் ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காருடன் ஹேமமாலினியின் கார் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் எதிரே வந்த காரில் இருந்த சோனம் என்ற நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை பலியானது. மேலும், மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. (குழந்தையின் வயது குறித்து சரியான விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெவ்வேறு இணையத்தளங்கள் குழந்தையின் வயதைக் குறைவாகவும், கூட்டியும் செய்திகள் வெளியிட்டுள்ளன)
இந்தச் சம்பவம் பற்றித் தவுசா பகுதின் மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், “ஹேமமாலினியின் கார் குறிப்பிட்ட அந்தப் பகுதியில், அதிவேகத்துடன் கடந்துள்ளது. அவரின் காரைக் கவனிக்காமல் எதிரே ஒரு வாகனம் வந்ததால், இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. அப்போது எதிரே வந்த காரில் தன் பெற்றோருடன் பயணம் செய்த பெண் குழந்தை ஒன்று பலியானது. ஹேமமாலினிக்குத் தலையில் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஹேமமாலினியின் ஓட்டுனர் காரை வேகமாக ஓட்டியதால் தான் குழந்தை பலியானதாகக் கூறி ராஜஸ்தான் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.