கோலாலம்பூர், ஜூலை 3 –(எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி மஇகா- சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி)
மலேசிய இந்தியர் காங்கிரசுக் கட்சிக்குச் சாவு மணி அடிக்க டத்தோஸ்ரீ பழனிவேல் போட்ட திட்டம் எதிர்வரும் 13 ஆம் தேதியோடு தவிடு பொடியாகி விடும். அதாவது, அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் செய்து கொண்டுள்ள மனு ,செலவுத் தொகையுடன் தள்ளுபடியாகும்.
இந்தத் திட்டவட்டமான தீர்ப்பு முற்றிலுமாக அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர் பெரிதும் நம்பிக்கையோடு தனக்குச் சாதகமாக எதிர்பார்க்கும் இவ்வழக்கு தோல்வியில் முடிவதால், அவர் வசமுள்ள அமைச்சர் பதவியைப் பிரதமர் மீட்டுக்கொள்ள வழியேற்படுத்தும் என்பதில் இரண்டு வகையான கருத்துக்கு இடமில்லை..
மலாக்கா மாநாடு தந்த பாடம்!
மலாக்காவில் நடைபெற்ற ம இ கா தேர்தலைப் பழனி் தலைமையேற்று நடத்தியதால், நிறைய தில்லுமுல்லுக்கு உள்ளாகி அத்தேர்தலை மறுபடியும் நடத்துவதற்குரிய ஆணையைப் பதிவு இலாகா முன் வைத்தபோது அதை ஏற்க பழனிவேலும் அவரின் சகாக்களும் மறுத்து விட்டனர்.
அதேவேளை அத்தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டுமானால் அதை 2009ஆம் ஆண்டிற்கான நிர்வாகமே பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று பதிவு இலாகா பணித்திருந்தது.
ஆனால், அந்த ஆணையை ஏற்காத பழனி, சீராய்வு மனுவை அவருடன் சேர்ந்து டத்தோ சோதிநாதன்,டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் திருவாளர்கள் பிரகாஷ்ராவ், இராமலிங்கம் உள்ளிட்ட ஐவருடன் தாக்கல் செய்தார்.
இதனால் வழக்கு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி செலவுத் தொகையுடன் வழக்கு தள்ளுபடியானது.
இந்த அதிரடியான தீர்ப்பைப் பழனி சற்றும் எதிர்பார்க்கவில்லை.தற்போது் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பழனி தரப்பு மீண்டும் 2009 ஆண்டுக்கான நிர்வாகத்தைத் தலையில் தூக்கி வைத்து ஆடத் தொடங்கியுள்ளது.
எந்தப் பதிவு இலாகா 2009 ஆம் ஆண்டு நிர்வாகத்தைக் கொண்டு மறு தேர்தல் நடத்தச் சொன்னதோ, அதை ஏற்காமல், அதற்கு எதிராக வழக்குத் தொடுத்துத் தோற்றுப் போன பழனி, அந்தத் தோல்விக்குப் பிறகு மீண்டும் 2009ஐக் கனவிலும் நினைவிலும் மறக்க முடியாதவராகத் தூக்கிக் கொண்டு உலா வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
அவரின் இந்த வேடிக்கையான விளையாட்டுக்கிடையிலேதான் அவர் மேற்கொண்டு வழக்கை மேல் முறையீடும் செய்துள்ளார்.
அந்த மேல்முறையீட்டின் நோக்கமே 2009 நிர்வாகத்தைத் தள்ளுப்படி செய்ய வேண்டும் என்பதுதான். நிலைமை அப்படியிருக்கும் போது, இப்போது காலம் கடந்து 2009 மீது பழனிக்குக் காதல் வந்துள்ளது.
2009 நிர்வாகத்தைத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மேல் முறையீடும் செய்து விட்டு, இப்போது தனது கையில் எடுத்துள்ளது 2009 நிர்வாகத்தைத்தான் என்றால், பழனியின் மனநிலை என்னவாக இருக்க முடியும் என்பதை மஇகாவினர் யோசிக்க வேண்டியுள்ளது!
2009 ஆண்டு பேராளர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தைக் கொண்டு் மறு தேர்தலை நடத்தச் சொன்ன பதிவு இலாகாவுக்கு நேர் எதிராக – முரணாக 15 பேரைத் தற்போது நீக்கியிருக்கியிருக்கிறார்.
அதேவேளை, ஒன்பது பேரைப் புதிதாக மத்தியச் செயலவை உறுப்பினர்களாக நியமித்தும் இருக்கிறார். இந்த நடவடிக்கையின் மூலம் முற்றாக 2009 ஆண்டுக்கான நிர்வாகத்தைத் தேவையில்லாமல் சிதைத்திருக்கிறார்.
உறுப்பினர் இல்லை!
இப்போதும் பழனி 2009 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத்தை ஒரு பின் பற்றுதல் என்ற அடிப்படையில்கூட அவர் ஏற்றுச் செயல்பட்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில் இவருடன் சேர்ந்து ஐந்துபேரும் நீதிமன்றத்திற்குக் கட்சியை முன்னிலைப் படுத்தியதற்காகத் தங்களின் கட்சி உறுப்பினர் தகுதியை இழந்து விட்டனர் என்று எழுந்துள்ள சட்டமோதலில் கூட, ஒரு சரியான முன்னெடுப்பை முன் வைக்க முடியாமல் பழனி பெரும் தடுமாற்றத்துடன் இருக்கின்றார்.
எனவே பழனியும் அவர் அணியினரும் இதனால் தலைகுப்புற விழுந்து உள்ளனர். அப்படி விழுந்தும்கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வாதத்திலே, “தானே தலைவர்! சர்வ வல்லமையும் தன்னிடமே இருக்கிறது” என்று சதா பிரகடனம் செய்த வண்ணமாகவே இருக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும் வரும் 13ஆம் தேதி, இவர் பெரிதும் எதிர்பார்க்கும் மேல்முறையீடு செலவுத் தொகையுடன் தள்ளுபடியானால் இவரின் அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
இந்த மேல் முறையீட்டு வழக்கின் சில அப்பட்டமான முடிவுகளுக்குத் தீர்வு பிறக்கும்! அதன் விபரம் வருமாறு:-
- இந்த மேல் முறையீட்டு மனு தள்ளுப்படியாகும் போது, 2009 ஆண்டுக்கான நிர்வாகம் உயிர் பெற்று விடும்.
- 2013 ஆண்டுக்கான தேர்தல் செல்லுப்படியானது அல்ல என்ற முடிவுக்குத் தீர்வு பிறந்துவிடும்
- அதேவேளை கட்சியின் மத்தியச் செயலவையின் முன் அனுமதி பெறாமல் வழக்கு மன்றம் சென்ற ஐந்து பேரின் உறுப்பிய தகுதி முடிவுக்கு வந்து விடும்.
- 2009 ஆம் ஆண்டுக்கான நிர்வாகமே மறு தேர்தலை நடத்துவதற்கு உரிமை பெற்றது என்பதில் தெளிவு பிறந்துவிடும்
- டாக்டர் சுப்ரா இடைக்காலத் தலைவர் என்பதில் இருக்கிற குழப்பம் முற்றாக அகற்றப்பட்டுவிடும்.
- சங்கங்களின் பதிவு இலாகாவே சர்வ வல்லமைக்குரியது. அதனுடைய வழிகாட்டுதலே பின்பற்றுதலுக்குரியது என்று உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.
- நீதி மன்றங்கள் இதுபோன்ற வழக்குகளில் தலையிட உரிமை இல்லை என்பதில் உறுதியான நிலைப்பாடு வெளிப்பட்டுவிடும்.
மேற்கண்ட அடிப்படையில் பல தீர்வுகள் சட்டத்தின் அடிப்படையில் அமைந்து விடுமேயானால் கட்சியின் உறுப்பினரே அல்லாத ஒருவர் கட்சியைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் நீடிக்க முடியாது என்பது தெளிவான விசயந்தானே? அதனால் அதற்குரிய தீர்வும் அமைந்து விடும்!
அதனால் ஹரிராயாவுக்குப்பிறகு அமையப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் பழனிக்குப் பிறகு அமரப்போகும் முழு அமைச்சர் யார்?
அதேவேளை, இன்னொரு துணை அமைச்சர் யார்? என்பதைச் சுற்றி ஓர் அலசல் ம இ கா வட்டத்திலே நடந்தாலும், அது குறித்து எடுக்கும் முடிவுக்குச் சொந்தக்காரர் பிரதமர் மட்டுமே!
அதனால், இன்னும் மூன்று வாரங்கள் அதற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!
அடுத்து, புதிய முழு அமைச்சர் துணையமைச்சர் குறித்த கண்ணோட்டத்துடன் சந்திப்போம்!
பெரு.அ.தமிழ்மணி
(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்குச் செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
இந்தக் கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.
தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்) அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
wrrcentre@gmail.com