Home இந்தியா 6 கோடி மதிப்புள்ள சோழர்காலச் சிலை அமெரிக்காவில் கைப்பற்றப்பட்டது!

6 கோடி மதிப்புள்ள சோழர்காலச் சிலை அமெரிக்காவில் கைப்பற்றப்பட்டது!

644
0
SHARE
Ad

Idol_2_2458902g_2459102gநியூயார்க், ஜூலை3- தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தானில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கைலாச நாதர் கோவிலில் திருடப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான மாணிக்கவாசகர் சிலையை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

இந்தச் சிலையை இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்கா வாழ் இந்தியத் தொழிலதிபரான சுபாஷ் கபூர், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோவில்களில் சாமி சிலைகளைக் கொள்ளையடித்து, அவற்றைக் கடத்திச் சென்று உலகமெங்கும் விற்பனை செய்து வந்தார்.

#TamilSchoolmychoice

அவர் 2011–ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது சிறைக்காவலில் உள்ளார்.

தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கைலாச நாதர் கோவிலில், சில ஆண்டுகளுக்கு முன் பல சாமி சிலைகள் கொள்ளையடிப்பட்டன.

இந்தக் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையும், அர்த்தனாரீஸ்வரர் சிலையும் ஆஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டு, அவற்றை அந்த நாட்டின் பிரதமர் டோனி அப்போட், பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த ஆண்டு ஒப்படைத்தார்.

ஆனால், அந்தக் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை என்னவானது எனத் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், ஆசியக் கலைப்பொருட்களைச் சேகரித்து வரும் அமெரிக்கர் ஒருவர், சுபாஷ் கபூரின் சிலைக் கடத்தல் விவகாரம் குறித்துத் தகவல்கள் அறிந்து, தாமாகவே முன் வந்து, தான் வாங்கி வைத்திருந்த மாணிக்கவாசகர் சிலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

2½ அடி உயரம் கொண்ட இந்த வெண்கலச் சிலை, ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) மதிப்பிலானது எனக் கருதப்படுகிறது.

இந்த மாணிக்க வாசகர் சிலையை ஒப்படைத்த நபர், அதை 2006–ம் ஆண்டு வாங்கியுள்ளார். அவரிடம் அந்தச் சிலை எங்கிருந்து வந்தது என்பது பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட அந்தச் சிலை தற்போது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  வசம் உள்ளது.