கோலாலம்பூர், ஜூலை 6 – 1 எம்.டி.பி நிறுவனத்தின் பல மில்லியன் ரிங்கிட் தொகை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இத்தகவலை அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் வெளியிட்டார். இந்தச் சிறப்பு நடவடிக்கைக் குழுவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பேங்க் நேகாரா, காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்றும், குறிப்பிட்ட 3 நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அந்த அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“இந்த விவகாரம் தொடர்பில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெறும். மூன்று நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துச் சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவுறுத்தப்படும்,” என்றார் அப்துல் கனி.
பிரதமர் நஜிப் குறித்து வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழு அதிரடியாக மூன்று நிறுவனங்களில் சோதனை நடத்தியது. இதையடுத்துப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
“பல்வேறு முகைமைகள் இந்த விசாரணை நடவடிக்கையில் பங்குபெறுவதால், விசாரணை ஆழமாகவும் நிபுணத்துவத்துடனும் நடைபெறும் என நம்புகிறேன். சிறப்பு நடவடிக்கைக் குழு எந்தவித அறிக்கைகளும் வெளியிடாமல் தங்களது விசாரணையை நடத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பர் என நம்புகிறேன். இடையில் அறிக்கைகள் வெளியிட்டால் அது பொதுமக்களைக் குழப்பிவிடக்கூடும்,” என்று அப்துல் கனி மேலும் தெரிவித்துள்ளார்.