கோலாலம்பூர், ஜூலை 6 – “வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடர்வதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்வேன்” எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நஸ்ரி தெரிவித்துள்ளதாவது, “ஒருவேளை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனத்திடம், பிரதமர் நஜிப்பின் கணக்கில் 1எம்டிபி-ன் பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான ஆதாரங்கள் இருந்திருந்தால், அதனை முறையாகக் காவல் துறையிடம் புகார் அளித்து இருக்க வேண்டும். அதுதான் மிகச் சரியான நடைமுறை. அதேபோல் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் மீது வழக்கு தொடர்வதும் முறையாகாது. பிரதமர் பதவி என்பது சீரான ஒன்று. நீங்கள் (நஜிப்) சீரானவர். நீங்கள் யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை, வால் ஸ்ட்ரீட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். இதுபற்றி விரைவில் அவரிடம் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், 1எம்டிபி-ல் தொடர்புடைய 3 நிறுவனங்கள் மீது பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருவது பற்றி அவர் கூறுகையில், “விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருவது தான் சரியான முறை. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம், ஒருவேளை தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அதனைச் சிறப்பு விசாரணை குழுவிடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் பிரதமர் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வதற்கான அவசியம் இருக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழமை, 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் நஜிப்பின் தனிக் கணக்கில் 700 மில்லியன் டாலர்கள் அளவிற்குப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி இருந்தது. செய்தி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டது என்றும், இந்த விவகாரத்தில், பிரதமர் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.