கோலாலம்பூர், ஜூலை 6 – பிரதமர் நஜிப் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் ஆட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், அவரே இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்துலக மலேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தனது வங்கிக் கணக்குகளில் 700 மில்லியன் டாலர் செலுத்தப்பட்டது தொடர்பில் விசாரணையை எதிர்கொண்டுள்ளதால், விடுமுறையில் செல்ல வேண்டும் எனப் பிரதமர் நஜிப்பிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் மொய்தீனுக்கு அம்மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“விசாரணை முடியும் வரை பிரதமர் விடுப்பில் செல்ல வேண்டும் எனத் துணைப் பிரதமர் மொய்தீன் வலியுறுத்த வேண்டும். அதுவரை இடைக்காலப் பிரதமராக மொய்தீன் பொறுப்பேற்க வேண்டும்,” என மாணவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
12 மாணவர் குழுக்கள் சார்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரச விசாரணை ஆணையம் ஒன்றை மொய்தீன் அமைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
வால் ஸ்டிரீட் ஜெர்னல் மீது நஜிப் மற்றும் மலேசிய அரசு சார்பில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாணவர்கள், அமெரிக்க நாளிதழ் மீது பேங்க் நேகரா மற்றும் எம்பேங்க் (Ambank) சார்பிலும் வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அப்போதுதான் மலேசிய அரசு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மக்களுக்குள்ள சந்தேகம் தீரும் என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய அளவில் மற்ற மாணவர்களுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.