பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6- பினாங்கு மாநில அரசுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு தனது வழக்கறிஞர்களிடம் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
பினாங்கு அரசில் பங்கேற்றிருந்த பாஸ் பிரதிநிதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அக்கட்சி இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது.
“மக்கள் பிரதிநிதிகளின் நன்மதிப்பே முக்கியமானது. பினாங்கு அரசு பதவி நீக்கம் செய்ததால், அப்பிரதிநிதிகள் பிரச்சினைக்குரியவர்கள் எனப் பொதுமக்கள் கருத வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படும்,” எனப் பினாங்கு பாஸ் ஆணையர் முகமட் ஃபௌசி யூசோஃப் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மன்றங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தில் இருந்து பாஸ் உறுப்பினர்களை நீக்கியிருப்பதால் பாஸ் மற்றும் ஜசெக உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து ஜசெகவுடனான அரசியல் ஒத்துழைப்பை ரத்து செய்வது எனப் பாஸ் பொதுப்பேரவையில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இதுதான் ஒழுக்கமுள்ள தலைமைத்துவமா? அவர்களால் எங்களுக்கு இதைச் செய்ய முடியும் என்றால், இத்தகைய தலைமைத்துவத்தில் இருந்து பொதுமக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? இத்தகைய நடவடிக்கைகளின் பின்னே அறியப்படாத காரணம் ஏதேனும் இருக்கக் கூடும்,” என்றார் முகமட் ஃபௌசி.
பினாங்குத் தீவின் மாநகர மன்ற உறுப்பினர்கள் இருவரை நீக்கியது ஏன்? என்று மாநில அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மற்ற இரு பாஸ் உறுப்பினர்களும் கொள்கை அடிப்படையில் தங்களது பதவியை விட்டு விலகியதாகத் தெரிவித்தார்.