கோலாலம்பூர், ஜூலை 9 – தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாகப் பிரதமர் நஜிப் தனது வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை வெளியிடத் தயாரா? என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சவால் விடுத்துள்ளார்.
“உங்கள் (நஜிப்) மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறீர்கள். அப்படியானால் உங்கள் வங்கிக் கணக்குகளைக் காண்பியுங்கள்,” என்று பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மகாதீர் கூறியுள்ளார்.
அவரது இந்தப் பேட்டியானாது புதன்கிழமையன்று இங்கிலாந்து ஊடகங்களில் வெளியானது.
“ஏதேனும் ஒரு விசயத்தில் அவர் (நஜிப்) மீது குற்றம்சாட்டினால், அது ஒரு சதி, முட்டாள்தனமானது, உண்மையற்றது என்கிறார். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபியுங்கள். அவரது வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்டாலே, இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அவரால் சுலபமாக நிரூபிக்க இயலும். அவர் பெயரில்தான் வங்கிக் கணக்குகள் உள்ளன. எனது வங்கிக் கணக்குக் விவரங்களை ஆராயலாம் என்று அவர் சொன்னாலே போதுமானது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி அளித்தபடி ஏன் பாலம் அமைக்கவில்லை, ஏன் ரயில் பாதைத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவில்லை எனப் பிரதமர் நஜிப்பிடம் நான் கேட்டது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை எல்லாம் தமக்குச் சாதாரணமான விசயங்கள் என்று கூறியுள்ளார்.
“ஒவ்வொரு பிரதமருக்கும் தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். அது அவர்களின் உரிமை. நான் அரசியல் ரீதியில் சதிச்செயலில் ஈடுபட்டிருப்பதாகப் பிரதமர் நஜிப் கூறுவதை மறுக்கிறேன். மேலும் அவரைப் பதவியிலிருந்து வெளியேற்ற வெளிநாட்டுச் சக்திகளுடன் நான் இணைந்து செயல்படுவதாகக் கூறுவதையும் ஏற்க இயலாது.
“தனக்கு எதிராக எழுப்பப்படும் புகார்கள் குறித்து அவர் (நஜிப்) ஏன் பதிலளிக்கவில்லை?” என மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.