கோலாலம்பூர், ஜூலை 10 – 1எம்டிபி நிறுவனத்தில் மேற்கொண்ட கணக்குத் தணிக்கையின் போது சில குறிப்பிட்ட ஆவணங்களைத் தங்களால் பெற முடியவில்லை என ஆடிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது துறையைச் சார்ந்த அதிகாரிகள் கேட்ட அனைத்து விதமான விவரங்களையும் 1எம்டிபி தரப்பு தந்திருப்பதாகவும் ஆடிட்டர் ஜெனரல் அம்பிரின் பாங் கூறினார்.
“நியாயப்படி சொல்வதானால் அவர்கள் (1எம்டிபி) பல்வேறு ஆவணங்களைத் தருகின்றனர். அதேசமயம் குறிப்பிட்ட சில ஆவணங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எங்களுடைய பணியை இன்னும் முடிக்கவில்லை,” என 1எம்டிபியின் இடைக்காலக் கணக்கறிக்கையைப் பொதுக் கணக்குக் குழுவிடம் ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அம்பிரின் பாங்.
1எம்டிபி தரப்பில் கிடைக்கும் ஒத்துழைப்பு திருப்தியளிக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், மேலும் சில ஆவணங்களுக்காகக் காத்திருப்பதாக மீண்டும் கூறினார்.
“அக்குறிப்பிட்ட ஆவணங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை எனில், வேறு வழிகளில் அவற்றைப் பெற முயற்சிப்போம்,” என்று அம்பிரின் பாங் தெரிவித்தார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக 1எம்டிபி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அவர்கள் இதைத்தான் சொல்லி வருகிறார்கள்,” என்றார் அம்பிரின்.
எனினும் தனது துறை அதிகாரிகள் இந்தாண்டு இறுதிக்குள் விசாரணையை முழுமையாக முடிப்பர் எனும் நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.