கோலாலம்பூர், ஜூலை 9 – ஊழியர்கள் விவகாரத்தில் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, மீண்டும் தனது அதிரடியைத் தொடங்கி உள்ளார். இம்முறை நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 7,800 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாகியாகப் பதவியேற்றது முதல் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்த நாதெல்லாவிற்கு, பெரும் சறுக்கலாக அமைந்த ஒன்று தான் நோக்கியா நிறுவனத்துடனான வர்த்தகம். இந்த வர்த்தகத்தில் சுமார் 7 .2 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்த மைக்ரோசாப்ட், இதன் மூலம் சுமார் 3 சதவீத திறன்பேசிகளையே விற்பனை செய்தது.
நிர்வாகியாக நாதெல்லா எடுத்த மிக மோசமான முடிவாக இது விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், சரிவுகளைத் தடுக்க திறன்பேசிகளின் பிரிவுகளில் பெரும்பான்மையான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் முடிவு செய்தது.
அதன்படி நேற்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 7,800 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையால் பணி வாய்ப்பை இழந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 7.6 பில்லியன் டாலர்கள் வரை வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று அறிவித்துள்ளது.