ஐம்மு, ஜூலை 10- காஷ்மீர் எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பொதுவாக வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு,சுனாமி போன்ற இயற்கைப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை மீட்பதற்குத் தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் செல்வது வழக்கம்.
ஆனால், காஷ்மீரில் பெய்த மழை வெள்ளத்தில் ராணுவ வீரர்களே சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதனால் தராணா, தேவிக், உஜா ஆகிய ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுத் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
சாம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 28 ராணுவ வீரர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இத்தகவலறிந்து இந்திய விமான மீட்புப்படை அங்கு விரைந்து சென்று ஹெலிகாப்டர் மூலமாக, வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 வீரர்களை மீட்டது ; அவர்களோடு ஏராளமான ஆயுதங்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.